Wednesday, September 5, 2012



கொழும்பு:இலங்கையில் நடைபெற்று வரும், மறு குடியமர்த்தல் பணிகளை பார்வையிட,ஐ.நா., நிபுணர் குழு, வரும், 14ம் தேதி, அங்கு செல்கிறது.இலங்கையில், 2009ல், விடுதலைப் புலிகளுடன் நடந்த இறுதிப் போரின் போது, அப்பாவிப் பொதுமக்கள், வேண்டுமென்றே, குறிவைத்து தாக்கிக் கொல்லப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, மார்ச் மாதம், ஜெனிவாவில் நடந்த, ஐ.நா., மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தின் போது, இலங்கை அரசுக்கு எதிராக, அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது.
அதில், இறுதிப் போருக்குப் பின், இலங்கை அரசு அமைத்த கமிஷனின் பரிந்துரைகளை, விரைவாக நிறைவேற்ற வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது.மேலும், போரில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நலனுக்காக, செயல் திட்டம் ஒன்றை, இலங்கை அரசு உருவாக்க வேண்டும். ஐ.நா., தீர்மானத்தில் கூறப்பட்ட பரிந்துரைகளை, நிறைவேற்ற தேவையான ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப உதவிகளை, இலங்கை அரசுடன் கலந்து ஆலோசித்த பின், ஐ.நா., மனித உரிமை கமிஷன் அலுவலகம் வழங்கும் என்றும், தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இந்த தீர்மானத்தை ஏற்க, இலங்கை அரசு முதலில் மறுத்தது. இலங்கையின் உள்விவகாரத்தில் தலையிடும் செயல் இது என்றும் கூறியது.
இதன்பின், தன் நிலையை மாற்றிக் கொண்ட இலங்கை அரசு, ஐ.நா., மனித உரிமைகள் குழுவின் தொழில்நுட்பக் குழுவை அனுமதிக்க முடிவு செய்துள்ளது.
இதையடுத்து, வரும், 14ம் தேதி, ஐ.நா., மனித உரிமைகள் ஆணைய ஐகமிஷனர் நவி பிள்ளை தலைமையில், தொழில் நுட்பக் குழு, இலங்கை செல்கிறது. இக்குழுவினர், இலங்கையில், போரில் பாதிக்கப்பட்ட பொதுமக்களை, மறு குடியமர்த்த மேற்கொண்டு வரும் பணிகளையும், போர் காரணமாக, அந்நாட்டிலேயே இடம்பெயர்ந்து வாழும் மக்களின் பிரச்னைகள் குறித்தும், ஆய்வு செய்வர். பின், இது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைள் பற்றிய ஆலோசனைகளை, இலங்கை அரசுக்கு, குழுவினர் வழங்குவர்.

No comments:

Post a Comment